மண் புழு உரம் தயாரித்தல்

1127

இயற்கையில் கிடைக்கக்கூடிய அங்ககக் கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணியிர் மற்றும் நொதிகளால் மண்புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறுசிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே (நாங்கூழ் கட்டிகள்) மண்புழு உரம் எனப்படுகிறது.


மண்புழுவானது உழவர்களின் நண்பன் மற்றும் மண்ணின் குடல் என்று அழைக்கப்படுகிறது.  உலகில் 10 குடும்பங்களைச் சார்ந்த 3220 வகையான மண்புழுக்கள் உள்ளன.  இந்தியாவில் ஏறக்குறைய 500 வகையான மண்புழுக்கள் உள்ளன.  மண்புழுக்கள் வாழும் வாழ்விடத்திற்கேற்ப மேல்மட்ட, இடைமட்ட மற்றும் அடிமட்ட புழுக்கள் என மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  இவற்றுள் மேல்மட்ட மற்றும் இடைமட்ட வகை புழுக்களே உரம் தயாரிக்க சிறந்தவையாகும்.  மண்புழுக்கள் தனது எடையைப் போல் 2 முதல் 5 மடங்கு அங்ககப் பொருட்களை உண்டு, அவற்றுள் 5-10 சதவீதத்தை உணவாகப் பயன்படுத்தி மீதியை கழிவாக அதாவது உரமாக வெளித்தள்ளும் திறன் கொண்டவை.

விரைவாக இனப்பெருக்கம் செய்ய கூடியதும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதும், பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாகவும் உள்ள இனங்களையே தேர்வு செய்ய வேண்டும்.  பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டர்ஸ், யூட்ரிலஸ் யூசினியே மற்றும் எய்சீனியா பேட்டிடா போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொட்டி முறை, குவி முறை, குழி முறை

தொட்டி முறையில் புழுக்களானது சிறிய அளவு முதல் பெரிய அளவிலான தொட்டிகளில் வளர்க்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.  பொதுவாக 10 அடி நீளம், 5 அடி அகலம், 2 அடி உயரமுள்ள சிமெண்ட் தொட்டிகளில் மண்புழு வளர்க்கப்படுகிறது.  இந்த முறையில் மண்புழு உரம் அதிக அளவில் தயாரிப்பது கடினம்.  குறைந்த அளவு தயாரிப்பதற்கு உம்முறை சிறந்தது.  மேலும் இம்முறையில் மண்புழு வடிநீர் சேமிக்கப்பட்டு பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

குவி முறையானது வாணிப ரீதியில் அதிக அளவில் உரம் தயாரிக்க சிறந்த முறையாகும்.  இம்முறையில் நீளவாக்கில் படுக்கைகள் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் புழுக்கள் வளர்க்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.  ஒரு சதுர மீட்டருக்கு 1000 முதல் 1500 புழுக்கள் இருக்க வேண்டும்.  படுக்கையானது 3 அடி அகலமும், 15 அடி நீளமும் 2 அடி உயரமும் உள்ளதாக அமைத்திடல் வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்பட்ட படுக்கையில் முதல் ஐந்து முதல் பத்து செ.மீ. உயரத்திற்கு மரத்தூள் (அ) சிறிதாக வெட்டப்பட்ட கரும்புத் தோகை (அ) தேங்காய் நார் கழிவினை இட்டு புழுக்களுக்கு அடித்தளம் அமைத்திடல் வேண்டும்.  இதற்கு மேல் 10 முதல் 15 செ.மீ. உயரத்திற்கு கால்நடைகளின் மட்கவைக்கப்பட்ட சாணம் (அ) மட்க வைக்கப்பட்ட தாவரக்கழிவுகள் (அ) இலைகளை இட வேண்டும்.  50 சதவீதம் மாட்டுச்சாணத்துடன் 50 சதவீதம் மட்கிய கோழி கழிவுகளையும் பயன்படுத்தலாம்.  இதன் மேல் 2 செ.மீ. உயரத்திற்கு வயல் மண் இட்டு கழிவுகளை அடுக்கடுக்காக இட்டு அதற்கு மேல் மண்புழுக்களை விட வேண்டும். பின்னர் கடைசியாக வைக்கோல் (அ) காய்ந்த புல் கொண்டு அடுக்கினை போர்வையாக மூடவேண்டும்.  இதன் மூலம் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

படுக்கைகள் அமைக்கப்பட்டு 45 முதல் 60 நாட்களில் உரம் தயாராகிறது.  மண்புழு உரம் எடுப்பதற்கு முன்பு நீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும்.  இவ்வாறு செய்வதால் புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்று விடுவதால் எளிதான முறையில் மேலுள்ள உரங்களை சேகரிக்கலாம்.  சேகரித்த உரங்களை 3 மில்லி மீட்டர் அளவுள்ள சல்லடைகள் மூலம் சளித்து தரமான உரத்தினை பிரித்து எடுக்கலாம்.  1 டன் கழிவுகளுக்கு 1 கிலோ அளவில் அசோபாஸ் உயிர் உரத்தினை கலந்து ஊட்டமேற்றலாம்.

வெப்பநிலையானது 25 முதல் 30 டிகிரி சென்டிகிரேட் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஈரப்பதமானது 50 முதல் 60 சதம் இருத்தல் வேண்டும்.

ஆங்கக்கழிவானது அதிக காரத்தன்மையோ (அ) அமிலத் தன்மையோ உடையதாக இருத்தல் கூடாது.

கழிவுகளில் கார்பன் நைட்ரஜன் விகிதம் 20:1 முதல் 30:1 வரை இருத்தல் வேண்டும்.

தயாரிக்கப்படும் இடமானது நல்ல காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உடையதாக இருத்தல் வேண்டும்.  மழை மற்றும் வெய்யிலில் இருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.

இடப்படும் அங்ககப் பொருட்களானது பாதியளவு மட்கியவையாக இருத்தல் வேண்டும்.
பசுமையான இலைகளையோ (அ) சாணத்தையோ உபயோகப்படுத்தல் கூடாது.  ஏனெனில் இவை மட்கும்போது ஏற்படும் வெப்பத்தால் புழுக்கள் இறந்து விடும்.
எறும்பு, எலி போன்ற தீங்கு விளைவிக்கும் உயிரினங்களிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.

மண்புழு உரத்தின் பயன்கள்

நிலத்தின் அங்ககப்பொருட்களின் அளவு மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகின்றது.

தேவையான பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்பாட்டினை அதிகரிக்கின்றது.
மண்புழு உரமிடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குரணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.  இதனால் மண்ணின் நீர்பிடிப்பு சக்தி, காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதியை அதிகரிக்கின்றது.

களிமண்பாங்கான மண்ணில் உள்ள குழம்பு தன்மையை குறைக்கிறது. கோடைக்காலத்தில் மண்ணில் வெப்பநிலையை குறைத்து வேர் காயம் ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் மழைக்காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.

மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணின் உப்புக்கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.

மண்புழு உரத்தில் உள்ள ஆக்சின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச்செய்கிறது.  ஜிப்ரலின் பயிரை பூக்கச்செய்கிறது மற்றும் கியூமிக் அமிலம் வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது. கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண்புழு உரம் தயாரிப்பதை தொழிலாக டேற்கொள்வதால் வருமானமும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

மண்புழு உரத்திலுள்ள சத்துப்பொருட்களின் அளவு

மண்புழு உத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவு பொருள்களை பொருத்தே அமைகிறது.  பொதுவாக மண்புழு உரத்தில் சுமார் 12-17 சதவீதம் அங்கக்க கார்பன், 0.5 – 1.5 சதவீதம் தழைச் சத்து, 0.1 – 0.6 சதவீதம் மணிச்சத்து, 0.1 – 0.9 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.  மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து “பி” மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

மண்புழு உரமிட பரிந்துரைகள்

பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2 டன் அளவில் இட பரிந்துரை செய்யப்படுகிறது (அனைத்து பயிர்களுக்கும்). தேன்னை மற்றும் பழ வகை மரங்களுக்கு வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 10 கிலோ அளவில் இட பரிந்துரை செய்யப்படுகிறது.  மல்லிகை, ரோஜா மற்றும் அலங்கார செடிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தலா 250 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.  மண்ணின் மேற்பரப்பில் இட்டால் மண்புழு உரத்தில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெயில் படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்-636001.

தொகுப்பு – ப.ரவி, து.ஜெயந்தி, நா. ஸ்ரீபாலாஜி

நன்றி – www.thinaboomi.com (வேளாண் பூமி)




%d bloggers like this: