மண்டல அலுவலர்களுக்கான பொறுப்புகள், பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு.

மண்டல அலுவலர்களுக்கான பொறுப்புகள், பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு.


பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர், குன்னம்  சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல அலுவலர்களுக்கான பொறுப்புகள், பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இந்தப் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. சாந்தா பேசியது:  பெரம்பலூர், குன்னம்  தொகுதிகளில் 652 வாக்குச்சாவடி மையங்களும் 63 மண்டலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்து குடிநீர், கழிவறை, கைப்பிடியுடன் சாய்தளப் பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வேண்டிய சாலைகள், பாதைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.


தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களைத் தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், குழுவினர், மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் என யாரேனும் ஒருவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 1800 425 2240 எனும் கட்டணமில்லா தொலைபேசியிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.


தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்த அடிப்படைப் பயிற்சியும், மக்களவை பொதுத்தேர்தல், 2019- இல் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் குறித்தும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் மற்றும்  வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமணிLeave a Reply

%d bloggers like this: