மங்களமேடு அருகே 520 சிமெண்ட் மூட்டையுடன் லாரி கடத்தல்

மங்களமேடு அருகே 520 சிமெண்ட் மூட்டையுடன் லாரி கடத்தல்


பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே 520 சிமெண்ட் மூட்டைகளுடன் திருடப்பட்ட லாரியை மங்கலமேடு போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 23.1.2019 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சிமெண்டு மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அங்குசென்ற அடையாளம் தெரியாத சிலர் லாரி ஓட்டுநர் ஜீவரத்தினத்தை தாக்கிவிட்டு அந்த லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (30), ஜான்சன் (21), ஜெயபாரத் (24), அரசு (20), அருணாசலம் (22) ஆகியோர் லாரியை கடத்திசென்று, விராலிமலை அருகேயுள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்த அருணிடம் (23) ஒப்படைத்துள்ளதும், திருச்சியை சேர்ந்த சுரேந்திரன் (23) என்னும் ஓட்டுநர் சிமெண்ட் லாரியை கடத்த உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மங்கலமேடு சரக துணை கண்காணிப்பாளர் தேவராஜன் மேற்பார்வையில், ஆய்வாளர் நாஞ்சில்குமார் உள்ளிட்ட தனிப்படையினர் சிவா உள்பட 7 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், மணப்பாறை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 520 சிமெண்டு மூட்டைகளுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் வேப்பந்தட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் மன்றத்தில், நீதிபதி கருப்புசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: