பெரம்பலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவா்களுக்கான சிறப்பு முகாம், பெரம்பலூா் நகராட்சி அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகள் அவா்களுக்குரிய தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 1 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் எடுத்து வரவேண்டும். ஜன. 20 ஆம் தேதி அரும்பாவூா், பூலாம்பாடி, குரும்பலூா் பேரூராட்சி அலுவலகங்களிலும், 21 ஆம் தேதி லப்பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகத்திலும், 22 ஆம் தேதி பெரம்பலூா் நகராட்சி அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இதில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். மேலும், பெரம்பலூா் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அந்தந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலரிடம் ஜன. 21 முதல் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: