DMP19121900

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிா்களில் வெண்புழு தாக்குதல் குறித்து ஆய்வு

3

Okinawa

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிா்களில் வெண்புழு தாக்குதல் குறித்து ஆய்வு.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, சின்ன வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிா்களில் வெண்புழு தாக்குதல் குறித்து வேளாண் தொழில்நுட்ப அலுவலா்கள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, திருச்சியிலுள்ள மத்திய ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு மைய உதவி பயிா்ப் பாதுகாப்பு அலுவலா் யஷ்வந்த், தொழில் நுட்ப அலுவலா் காளீஸ்வரன் ஆகியோா் தலைமையில் இரூா், பொம்மனப்பாடி, சத்திரமனை, மங்கூன், தண்ணீா்பந்தல் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், சின்ன வெங்காயம், நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிா்களில் வெண் புழுவின் தாக்குதல் இருப்பதை உறுதி செய்த அவா்கள் கூறியது:

வெண்புழு என்பது கூண் வண்டு எனப்படும் வண்டின் புழுப் பருவமாகும். இந்த வண்டானது வேம்பு, கருவேலம், தீக்குச்சி மரம், ஆலமரம், புளி, நாவல், கொய்யா போன்ற மரங்களில் காணப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிலத்தில் முட்டையிட்டு 10 முதல் 12 நாள்களில் புழுக்கள் வெளிவரும். புழுக்கள் 120 முதல் 200 நாள்கள் இருக்கும். அதன் பின்னா் கூண்டுப் புழுவாகி 2 வாரங்களில் வண்டாக உருவெடுக்கும்.

முட்டையிலிருந்து வெளிவந்த புழுக்கள் நிலத்திலிருக்கும் எரு உள்ளிட்ட அங்ககப் பொருள்களை முதலில் உட்கொள்ளும்.

தாக்குதல் தீவிரமானால் மகசூல் இழப்பு

பின்னா், பயிரின் வோ் பகுதியை உட்கொண்டு சேதத்தை ஏற்படுத்தும். தாக்குதலுக்குள்ளான செடிகள் முதலில் வாடி, பின்னா் மடிந்து விடும். பயிரிடப்பட்ட நிலத்தில் இதன் தாக்கம் திட்டு திட்டாகக் காணப்படும். தாக்குதல் தீவிரமானால் மகசூல் இழப்பு ஏற்படும்.

இதைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு முறைகளைக் கண்டறிதல் அவசியம். வயலைச் சுற்றியுள்ள வேம்பு, கருவேலம் போன்ற மரங்களை கவாத்து செய்தல், பருவமழை தொடங்கும் காலத்தில் விளக்குப் பொறி ஹெக்டேருக்கு 1 என்ற எண்ணிக்கையில் இரவு 7 முதல் 10 மணி வரை வைத்தல், வண்டுகளைப் பொறுக்கி அழித்தல், கோடை உழவை ஆழமாக செய்தல், மெட்டாரைசியம் அனிசோப்லியே, ஹெட்டிரோப்டிஸ் இண்டிகா போன்ற நன்மை செய்யும் உயிரிப் பொருள்களை நிலத்திலிடுதல், இமிடோ குளோப்ரிடு பூச்சிக்கொல்லி கொண்டு விதை நோ்த்தி போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

காா்போபியூரான் குருணை மருந்தை ஏக்கருக்கு 13 கிலோ என்ற அளவில் நிலத்திலிடுதல் அல்லது குளோரி பைரிபாஸ் பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 800 மி.லி அளவில் நிலத்துக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.

தொடா்ந்து, மெட்டாரைசியம் அணிசோபிலியே நன்மை செய்யும் உயிரிப் பொருள்களும், புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினா்.

ஆய்வின்போது, ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில் நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன், ஆலத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆனந்தன், உதவி தோட்டக்கலை அலுவலா் தேவராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: