புதிய செய்தி :

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தத்தில் உலக புத்தக தின விழா

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தத்தில் உலக புத்தக தின விழா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் உலக புத்தக தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் என். கிருஷ்ணமூர்த்தி, நூலக புரவலர்களுக்கான பட்டயம் வழங்கி சமூக மாற்றத்துக்கான கருவி கல்வியே எனும் தலைப்பில் பேசினார்.

முன்னிலை வகித்த மாவட்ட மைய நூலகர் செல்வராஜ், நூலகங்களுக்குச் செல்வோம் என்னும் தலைப்பிலும், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பி. தயாளன் வீட்டுக்குள் நூலக அறை என்னும் தலைப்பிலும், புரவலர் காமராசு வள்ளுவமே வாழ்வுக்கு வழி என்னும் தலைப்பிலும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் தாகீர் பாட்சா நூலகமும் – அறிஞர்களும் என்னும் தலைப்பிலும், சின்ன வெண்மணி வளவனார் சிந்தனைச் சோலை  நிறுவனரும், ஆசிரியருமான வீரபாண்டியன் நாள்தோறும் நூலகம் செல்வோம் என்னும் தலைப்பிலும் பேசினர்.

தொடர்ந்து, சிறந்த வாசகர்களுக்கான விருது 7 பேருக்கும், புத்தக தின விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், உலகத் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற சில்லக்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகர் வட்டத் தலைவர் தங்கம், மண்ணின் மக்கள் குழு உறுப்பினர்கள் சக்கரபாணி, ஆவாரை சதீசு, சுகுமார் இனியன், வெங்கடேசன், தமிழழகன், சிவா, சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஆவாரை ராசேந்திரன் வரவேற்றார். கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகர் ராசா நன்றி கூறினார்.

source: dinamaniLeave a Reply