புதிய செய்தி :

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் டூ வீலரில் செல்ல போறீங்களா …?

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான ஒரு முக்கிய பேருந்து நிலையமாய் இருந்து வருகிறது. இங்கு உள்ளூர் வெளியூர் பயணிகள் அதிக அளவில் வந்து போகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பதால் எப்பொழுதும் ஜனநெருக்கடியாக இருந்து வருகிறது. திருச்சி, அரியலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளில் பலர் டூ வீலரில் வந்து பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதே பேருந்து நிலையத்தில் கட்டண பார்க்கிங் வசதி இருந்தும் பலர் அதை பயன் படுத்துவது இல்லை. அதேபோல் காரில் வருபவர்களும் பேருந்து நிலையத்தில் எங்காவது நிறுத்தி விட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்று விடுகிறார்கள்.

மேலும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் செல்வதால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் டூ வீலர் மற்றும் கார் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இது பொது மக்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறப்படுவதற்கும் பெரும் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்ட பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பேருந்து நிலையத்திற்குள் டூ வீலர் மற்றும் கார்கள் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலோ,பார்க்கிங் செய்தாலோ வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால், பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து இடையூறு வெகுவாக குறையும் வாய்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களை பேருந்து ஏற்றி விடுவதில் பல சிரமங்கள் உள்ளன. நகராட்சியின் இந்த அறிவிப்பு நன்மை பயப்பதாக இருக்கும் அதே வேளையில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் பேருந்து ஏற மாற்றுவழியை உத்தேசித்தால் நன்றாக இருக்கும் என பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் கருதுகிறார்கள்.
Leave a Reply