பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்பு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபாலசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் வைத்து, கொடிமரத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.


சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்சவத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில், சென்னை திருமழிசை ஆழ்வார் கோவில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.


இதையடுத்து இன்று (புதன்கிழமை) சிம்மவாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) அனுமந்த வாகனத்திலும், வருகிற 15-ந் தேதி சேஷவாகனத்திலும், 16-ந் தேதி உதயகருடசேவையுடன், வெள்ளிகருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் 17-ந் தேதி யானை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.


முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் 18-ந் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற்றபின் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 19-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவம் மற்றும் இரவு குதிரைவாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 20-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. 21-ந் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சி, 22-ந் தேதி காலைஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் வீதி உலா, 23-ந் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றிவிழாவும், 27-ந் தேதி திருத்தேர் 8-ம் திருவிழாவில் காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமும், இரவு பெருமாள் ஏகாந்தசேவையுடன் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா மற்றும் கோவில் செயல் அலுவலர் வை.மணி மற்றும் திருக் கோவில் பணியாளர்கள், கட்டளை தாரர்கள் செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

23total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: