பெரம்பலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் – விவசயிக்கு 10 ஆண்டு சிறை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கூடலூரை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 59). இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரது வயலில், அப்பகுதியை சேர்ந்த சிலரும் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்தனர். இந்த நிலையில், கடந்த 27-11-2016 அன்று தனது வயலில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரது குழந்தையான, 7-ம் வகுப்பு படித்த 12 வயது சிறுமி அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தாள்.

இதைக்கண்ட சிவபிரகாசம் அச்சிறுமியை தனியாக அழைத்து பேச்சு கொடுத்தார். அப்போது கூடலூர் மொட்டையன் குளத்துக்கு நீ வந்தால் மொபட் ஓட்டுவதற்கு கற்று தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார். சிவபிரகாசத்தின் வக்கிர புத்தியை புரிந்துகொள்ள முடியாத அந்த சிறுமி, அவருடன் அந்த குளத்திற்கு சென்றாள். அப்போது அந்த சிறுமியை மொபட்டின் பின்னால் வைத்துக்கொண்டு போக்கு காட்டிய சிவபிரகாசம் நீண்ட தூரம் அழைத்து சென்றார். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், குழந்தை எங்காவது விளையாடி கொண்டிருப்பாள் என எண்ணி அவளது பெற்றோர் இருந்து விட்டனர்.

இதற்கிடையே அரியலூர் ஜெமீன் பேரையூர் சாலை வழியாக சென்ற சிவபிரகாசம் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு, சிவபிரகாசம் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாததால் பதறிப்போன பெற்றோர், பல இடங்களில் தேடினர். மறுநாள் காலை அந்த சிறுமியின் உறவினர் ஜெமீன் பேரையூர் அருகே பார்த்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். அப்போது நடந்த விவரங்களை கேள்விபட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன அச்சிறுமியின் பெற்றோர், சிவபிரகாசம் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபிரகாசத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது பெரம்பலூர் மகிளா கோர்ட்டில், போலீசார் வழக்கு தொடர்ந்து குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் சிவபிரகாசத்திற்கு விதிக்கப்படுகிறது. மேலும் சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்படுகிறது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டிருப்பதால் அதிகபட்ச தண்டனையான 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சிவபிரகாசம் அனுபவிப்பார், ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவிற்கு கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது என்று இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி வாதாடிய சித்ரா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், சிவபிரகாசத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Leave a Reply

%d bloggers like this: