Additional parking facility at Perambalur Government Hospital

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வாகன வசதி ஏற்படுத்தப்படுமா…?

25

Kallaru TV

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வாகன வசதி ஏற்படுத்தப்படுமா…?


பெரம்பலூர் நகரம், கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்துறையிலும் வியாபாரத்துறையிலும் வேகமான வளர்ச்சியை அடைந்துவரும் ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது.

1996ல் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட பிறகு, அனைத்து பேருந்து வசதிகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இயங்கி வருகிறது. அடுத்த ஆண்டு வெள்ளிவிழா காணப்போகும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய கேந்திரமாக இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால், பழைய பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு நிறைய குடியிருப்புகளும் தொழில் ஸ்தாபனங்களும் உள்ளன. குறிப்பாக அரசு மருத்துவனை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில், துறையூர் சாலையில் இருக்கிறது.

Kallaru TV

துறையூர் வழித்தடத்தில் அமைந்திருக்கும் அம்மாபாளையம், லாடபுரம், குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை… உள்ளிட்ட ஊர் மக்களும், பூலாம்பாடி வழித்தடத்தில் அமைந்திருக்கும் அ.மேட்டூர், அரும்பாவூர், தழுதாழை, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, எசனை… உள்ளிட்ட ஊர் மக்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

ஆனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அமைந்திருக்கும் லப்பைக்குடிக்காடு, வ.களத்தூர், சின்னாறு, வாலிகண்டபுரம், தேவையூர், துறைமங்களம், சிறுவாச்சூர், கோபாலபுரம், பாடாலூர்… உள்ளிட்ட ஊர் மக்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்து, பிறகு அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று, அதன் பிறகு நடந்து சென்று அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

அதிலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை அடைய நிறைய சேர் ஆட்டோக்கள் இருந்தாலும், மருத்துவமனைக்கே நேரடியாகச் செல்லும் வாகனங்கள் மிகமிகக் குறைவு.

இதனால் பெரம்பலூரின் கிழக்குப் பகுதி ஊர்களைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்குச் செல்ல, சரியான வாகன வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

மேலும் பனிக்காலம் விரைவில் தொடங்க இருப்பதால் அதிக அளவில் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே மாவட்டத்தின் முக்கியப் பகுதியான புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதலாகவும் பிரத்தியேகமாகவும் சேர் ஆட்டோ மற்றும் மினி பஸ் வாகனங்களை இயக்கினால், பெரம்பலூர் புதிய பேருந்துநிலையப் பகுதி மற்றும் அதன் கிழக்குப்புற சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தட ஊர்களில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட துறையினர் முன்வந்து, அரசு மருத்துவமனைக்குச் செல்ல வாகனப் போக்குவரத்து வசதியினை கொண்டு வந்தால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு நன்மையாக இருக்கும். இது குறித்த செயல்பாடுகளை மாவட்டத்திலுள்ள சமூக ஆர்வலர்களும் முன்னெடுக்க வேண்டும்.

ச.மோகன்

கருத்துக்களைப் பதிவிட
70948 56420




Leave a Reply

%d bloggers like this: