புதிய செய்தி :

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பருத்தி, நெல் மணிகள் சேதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த பரவலான மழையால் அறுவடை தருணத்தில் இருந்த நெல் மணிகளும், வெடித்த பருத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகம் அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவியதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பலவலான மழை பதிவானது. பெரம்பலூர் பகுதியில் 27 மி.மீட்டரும், வேப்பந்தட்டை பகுதியில் 38 மி. மீட்டரும், தழுதாழை பகுதியில் 10 மி. மீட்டரும், செட்டிக்குளம் பகுதியில் 1 மி. மீட்டரும் என மொத்தம் 76 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயல்களில் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. 75 சதவீத பருத்தி வயல்களில் வெடித்த பஞ்சுகளை பிரித்தெடுத்துள்ள நிலையில், கட்டுப்படியான விலை கிடைக்காததால் மீதமுள்ள விவசாயிகள் பருத்தி எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை பெய்த மழையில் செடிகளில் வெடித்த பஞ்சுகள் அனைத்தும் நனைந்து நாசமடைந்துள்ளன. இதனால், பருத்தி விவசாயிகள் செய்வதறியாமல் கவலையில் உள்ளனர். இதேபோல, அறுவடை செய்து வயல்களிலேயே போடப்பட்டிருந்த நெல் மணிகளும், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் மணிகளும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறியது:
2 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். உழவுப்பணி, ஆள் கூலி, மருந்து செலவு, களை எடுத்தல் உள்பட ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவிட்டுள்ளேன்.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பருத்திக்கான கொள்முதல் விலையும் மிகவும் குறைந்துள்ளது. விவசாயிகள் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ள நிலையிலும், இடைத்தரகர்கள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இன்னும் ஒருவார காலத்தில் கொள்முதல் விலை உயரும் என நினைத்து, செடிகளில் வெடித்த பஞ்சுகளை எடுக்காமல் காத்திருந்தேன்.

இதனிடையே மழை பெய்ததால், செடிகளில் வெடித்த பஞ்சுகள் அனைத்தும் மழைநீரில் நனைந்து நாசமாகிவிட்டது. இதனால், சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்தவழியின்றி தவித்து வருகிறேன் என்றார் அவர்.
Leave a Reply