பெரம்பலூரில் போலீஸார் பற்றாக்குறையால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பலூரில் போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த பெரம்பலூர் நகரில் கடைவீதி சாலையில் சீரானப் போக்குவரத்து என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு ஒரே வழி பயன்படுத்தப்படுகிறது. மேலும் விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் இந்தச் சாலை வழியாகத் தான் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும்.

ஆனால், கட்டுக்கடங்காத வாகன நெரிசலால் அவசர ஊர்திகள் உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், இவ்வழியாகச் செல்லும் நோயாளிகள், மாணவர்கள், அலுவலக பணிக்குச் செல்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதியுற்று வருகின்றனர்.

இப்பகுதியில் வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மருத்துவமனை, கல்லூரிகள் அமைந்திருப்பதால் நாள்தோறும் ஏராளமானோர் இச்சாலை வழியாகதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இப்பகுதி வாகன நெரிசலால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகிறது.

மேலும், மிகவும் குறுகலான இப்பகுதியில் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை, ஒருவழி சாலையாக பயன்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவித்தும் யாரும் கடைபிடிக்கவில்லை.

போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்கள்:

இச்சாலையின் இருபுறம் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து பெரும்பாலான கடைகள் இயங்கி வருவதால், சாலைகளின் ஓரமாகவும் செல்ல முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். வணிக நிறுவனங்களுக்கு செல்லும் நபர்கள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி, போக்குவரத்துக்கு மேலும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை:
வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை நிலவுகிறது. போக்குவரத்து காவல் பிரிவில் தலா ஒரு ஆய்வாளர், உதவி ஆய்வாளர், 4 போலீஸார் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, பெரம்பலூரில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக போலீஸாரை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
Leave a Reply

%d bloggers like this: