பெரம்பலூரில் பிப்ரவரியில் புத்தகக் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா

பெரம்பலூர் மாவட்டத்தின் 7 ஆவது புத்தகக் கண்காட்சி பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் ஆகியவை இணைந்து புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது.  நிகழாண்டிலும் புத்தகக் கண்காட்சி நடத்தும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பண்பாட்டு மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: நிகழாண்டுக்கான புத்தகக் கண்காட்சி பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலக மைதானத்தில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகக் கண்காட்சியில்  பங்கேற்கும் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பட்டியல் விரைவில் தயார் செய்ய வேண்டும்.  சொற்பொழிவு, பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தவும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமைவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் சாந்தா.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஊராட்சி உதவி இயக்குநர் பாரதிதாசன், மக்கள் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் ஜே. அரவிந்தன், சரவணன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

source: dinamaniLeave a Reply

%d bloggers like this: