Theft in several houses in Perambalur

பெரம்பலூரில் துணிகரம்: பல வீடுகளில் 13 பவுன் நகை 4 லட்சம் திருட்டு

53

Muthalagu e1570850031426

பெரம்பலூரில் துணிகரம்: பல வீடுகளில் 13 பவுன் நகை 4 லட்சம் திருட்டு


பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வடபுறம் உள்ள எம்.எம்.நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் அனுக்கூரில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜூலிமார்க்ரேட்(48) உடும்பியம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வின்னேயல்(24) என்கிற மகனும், வின்ஸ்லெட்(21) என்கிற மகளும் உள்ளனர்.

வின்னேயல் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். வின்ஸ்லெட் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வகுமாரின் மகன் வேலை தேடிதிருச்சிக்கும், மகள் கல்லூரிக்கும், மனைவி பள்ளிக்கும் சென்று விட்டனர். இதையடுத்து செல்வகுமார் வீட்டை பூட்டி விட்டு சாவியை மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு தெரியும் வழக்கமாக வீட்டின் வெளியே வைக்கும் ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பணிமுடிந்து சீக்கிரமாகவே செல்வகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த ரூ.2¾ லட்சமும், 3 பவுன் நகையும் திருடு போயிருந்தது. செல்வகுமார் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

Kallaru TV

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் ராபர்ட்(43). இவர் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(42) களரம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கணவன்- மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

கவிதா பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்து 5 பவுன் நகையும், ரூ.33 ஆயிரமும் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உதவி கணக்கு அலுவலராக பணிபுரிந்து வரும் பொன்னுசாமி(வயது 58) என்பவர், தனது மனைவி சின்னம்மாள், மகன் சத்தியநாராயணன்(14) மற்றும் மனைவியின் தங்கை மகள் சவுந்தர்யா(22) ஆகியோருடன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 11-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.கே.சி.நகர் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பொன்னுசாமி அலுவலகம் சம்பந்தமாக திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காலையிலேயே சென்று விட்டார். 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சத்தியநாராயணனும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த சின்னம்மாள் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், வீட்டின் அருகே உள்ள பாலமுத்து குமரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டனர். சாமி கும்பிட்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து சின்னம்மாள், சவுந்தர்யா ஆகியோர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 அறைகளில் இருந்த பீரோக்களும் திறந்து கிடந்தது. சவுந்தர்யாவின் திருமணத்திற்காக பொன்னுசாமி பீரோக்களில் வைத்திருந்த இருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருடு போயிருந்தது.

மேலும் அந்த வீட்டின் பக்கத்து வீடான இரும்பு கடை நடத்தி வரும் தங்கலிங்கத்தின்(52) வீட்டின் வளாக கதவின் பூட்டும், வீட்டின் நுழைவு வாயில் கதவின் கீரில் கேட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்கலிங்கத்தின் வீட்டில் திருடு ஏதும் போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையிலான பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

திருட்டு நடந்த வீட்டின் அருகே ஒரு காரில் 2 பேர் சந்தேகம்படும்படியாக சுற்றி திரிந்ததாகவும், அவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் போலீசார் திருட்டு நடந்த வீட்டின் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பெரம்பலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருவதாலும், குடியிருப்பு நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் இந்த துணிகர திருட்டு சம்பவம் நடந்ததாலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Muthalagu e1570850031426




Leave a Reply

%d bloggers like this: