தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு

தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு


தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து, ஆளுநராக நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுக் கடிதத்தை தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப் 8) 11 மணியளவில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின்னர் பின்னர், தனது தந்தை குமரி அனந்தன், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினர், தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் இரண்டாவது பெண் ஆளுநர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி வெங்கடாசலம் கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: