கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும்: புதுவை முதல்வர்

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும்: புதுவை முதல்வர்

புதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை கவர்னர் கிரண்பேடி இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது.

புதுவை துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று கிரண் பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறி, அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதனால் அதிகாரப் பிரச்சனை அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்டது. இப்படி உடனடியாக எதுவும் செய்யக்கூடாது. முறைப்படி விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக் கட்டை போடுவதாக கூறி, புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் குதித்திருக்கிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் கருப்பு சட்டை அணிந்து கிரண் பேடியின் வீட்டு முன்பாக இரவில் படுத்து உறங்கி போராட்டம் நடத்தினார்.

அவருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக் கட்டை போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், நரேந்திர மோடியின் தூண்டுதலின்பேரில் கிரண்பேடி இந்த வேலைகளை செய்து வருகிறார். சதிக்கு மோடிதான் காரணம். ஒவ்வொரு நாளும் எங்களது அரசுக்கு கிரண் பேடி பிரச்னை அளித்து வருகிறார்” என்று கூறினார்.

நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு கிரண்பேடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டின் முன்பாக படுத்து உறங்கும் போராட்டத்தை உங்களைப் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் நடத்தலாமா என்று கிரண் பேடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேசிய சாலைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சாலையில் ஹெல்மெட் இல்லாமல் சென்றவர்களை பிடித்து அவர்களிடம் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கிரண்பேடி விசாரித்தார். கட்டாய ஹெல்மெட்டை கொண்டு வர வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை முறையாக செய்ய வேண்டும் என்று நாராயணசாமி தரப்பு கூறியுள்ளது. நேற்று முன்தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கிரண்பேடியின் நடவடிக்கையை கண்டித்து ஹெல்மெட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: