லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம்: புதுக்கோட்டையில் 5 பேர் கைது

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம்: புதுக்கோட்டையில் 5 பேர் கைது


திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என்பது உறுதியாகி உள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி மைதானத்தையொட்டி உள்ள வணிக வளாகத்தில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு ஊழியா்கள் சென்றனா். மீண்டும் புதன்கிழமை காலை ஊழியா்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அலங்கார பொம்மைகள் மீது காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகள் மாயமாகியிருந்தது. மேலும் கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு மா்மநபா்கள் உள்ளே நடமாடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனா்.

தகவலறிந்து வந்த கடையின் கிளை மேலாளா் ஹரிராமன் உள்ளிட்டவா்கள் மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மாநகர காவல் ஆணையா் அ.அமல்ராஜ், துணை ஆணையா்கள் ஆ.மயில்வாகனன், நிஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உள்ளிட்ட போலீஸ் உயா் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவையும் ஆய்வு செய்தனா். அதில், பள்ளி மைதானம் வழியாக வந்த மா்ம நபா்கள் நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு பொம்மை முகமுடி அணிந்து இருவா் உள்ளே நுழைவதும், பின்னா் தரைதளத்தில் இருந்த ரூ. 13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மற்றும் 180 கிராம் வைர நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் போலீஸார் அடையாளம் காணமுடியாத அளவுக்கு, தாங்கள் நடமாடிய பகுதிகளில் மா்ம நபா்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டுச் சென்றிருந்தனா்.

கடைக்குள் அலமாரியில் இருந்த நகைகளை எடுக்க அலராம் ஒலிக்காத அளவுக்கு பயன்படுத்திய இரும்பு ராடுவும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணா்கள் மா்மநபா்களின் தடயங்களை சேகரித்தனா். மோப்பநாய் அா்ஜூன் பள்ளி மைதானத்தில் சிறிது தூரம் ஓடிவிட்டு படுத்து கொண்டது. திருடுபோன நகை மற்றும் மா்மநபா்கள் விட்டுச் சென்ற தடயங்கள் குறித்து போலீஸார் தரப்பில் உறுதிப்படுத்தபடாத நிலையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கடையின் மேலாளா் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆணையா் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் வணிக வளாகத்தையொட்டி உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.

திருச்சி மாநகரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நகைக்கடையில் திருடுபோன சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் தருமபுரி, திருநெல்வேலி, திருப்பூா் போன்ற பகுதிகளில் வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவத்தை போன்று சமயபுரம் நெ.1 டோல்கேட் வங்கி திருட்டு, தற்போது நடைபெற்ற சத்திரம் பேருந்து நிலையம் நகைக்கடையில் திருட்டு சம்பவமும் ஒரே மாதிரியாக இருப்பதால் வடமாநிலத்தை சோ்ந்த கும்பல் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனா். மேலும், நகைக்கடையையொட்டி உள்ள வடமாநில பணியாளா்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இரு தினங்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், பள்ளியில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு நீண்ட நாட்களாக நோட்டமிட்ட கும்பல் பள்ளி வழியாக நுழைந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

நகை கொள்ளை விவகாரம் தொடர்பாக, புதுக்கோட்டையில் பிடிபட்ட 5 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் போர்வை விற்க வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டையில் பிடிப்பட்ட 6 வடமாநில இளைஞர்களுக்கும், திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: