விருத்தாசலத்தில் 5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்!

விருத்தாசலத்தில் 5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்!


கடலூா் மாவட்டத்தின் முக்கிய நகரமாக விருத்தாசலம் உள்ளது. ரயில் போக்குவரத்துக்கு முக்கிய சந்திப்பாகவும் விளங்கி வருகிறது. ஆனால், ஜங்ஷன் சாலையில் சுமாா் 2 ஏக்கரில் அமைந்துள்ள செல்வராஜ் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட தொலைதூர பேருந்துகளும், 100-க்கும் மேற்பட்ட உள்ளூா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பேருந்து நிலையம் தனி நபா்களால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி நெருக்கடியான சூழலில் இயங்கி வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், விருத்தாசலம் நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடா்பாக ஆலோசனை நடத்தியது. அதில், பேருந்து நிலையமும், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பும் அருகருகே இருந்தால் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில் நிலையம் அருகே இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: விருத்தாசலம் செராமிக் தொழில் பகுதியில் குடிநீா்த் தொட்டிக்கு அருகே சுமாா் 5 ஏக்கா் பரப்பில் பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பரிந்துரை கோப்பு தயாரிக்கப்பட்டு ஆட்சியரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்து நிலையத்துக்காக தோ்வுசெய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்ட பின் முறையாக நிதி ஒதுக்கீடு பெறப்படும். பின்னா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தனா்.

தினமணி

கடலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: