பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் அவர்கள் 10.05.2019 இன்று அதிகாலை 1.20 மணிக்கு காலமானார்கள். அன்னாரது உடல் திருநெல்வேலி பேட்டையில் உள்ள ரகுமான் பேட்டை ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 5 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தோப்பில் முகமது மீரான் அவர்களைப் பற்றி:

இலக்கியத்துக்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்ற பெருமை தோப்பில் முகமது மீரான் அவர்களை சாரும்..

குமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணத்தில் பிறந்து ஆரம்ப கல்வியை மலையாள மொழியில் உள்ளூர் பள்ளிகூடத்தில் படித்த முகமது மீரான் அவர்கள் கல்லூரி படிப்பில் பி. ஏ பொருளாதாரம் நாகர்கோவில் இந்து கல்லூரியில் படித்தவர்.

தான் பிறந்து வளர்ந்த சமூகத்தில் அன்றாடம் காணும் காட்சிகளை களமாக கொண்டு பாத்திரம் அமைத்து கதைகள் எழுதிய காரணமாக பல்வேறு விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளை சந்தித்தவர் முகமது மீரான்.. ஆரம்ப காலத்தில் இவரது எழுத்துகள் பல பத்திரிகைகளில் வெளியாகாத சூழலில் பிறை மாத இதழில் சிறுகதைகள் வெளிவர துவங்கியது…

முஸ்லிம் முரசில் தொடராக வெளிவந்து ஒரே சமயத்தில் எதிர்ப்புகளையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ”ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் முகமது மீரான் அவர்களை தமிழ் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. அதே காலகட்டத்தில் பேராசிரியர் கா. முகமது பாறூக் அவர்களின் மதீநா மாத இதழில் துறைமுகம் நாவல் தொடராக வெளியானது.

முஸ்லிம் முரசில் தொடராக வெளிவந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தில் புரையோடி கிடந்த அவலங்களை ஆங்காங்கே கதையில் வெளிப்படுத்தியதால் ஏற்பட்ட விமர்சனம் காரணமாக ஆளூர் ஜலாலால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ”சாய்வு நாற்காலி” நாவலுக்கு 1997 ம் வருடம் சாகித்ய அகாதமி விருது முகமது மீரான் அவர்களுக்கு கிடைத்தது..

மேலும், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு உள்ளிட்ட 6 நாவல்கள், அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலணி உள்ளிட்ட 5 சிறுகதை தொகுப்பு, பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மொழி பெயர்ப்பு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான ”குடியேற்றம்” புதினம் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்தில் குடியேறியவர்களின் பூர்வீகத்தை அலசி ஆராயும் வகையில் வெளியான புத்தகம்.

சாகித்ய அகாதமி விருதுடன், தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருதுகள் பெற்றுள்ளார்…

இவரது சாய்வு நாற்காலி நாவலை இக்பால் நாஷ்கி என்பவர் காஷ்மீரி மொழியில் மொழிபெயர்த்து அதற்கும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இவரது கடலோர கிராமத்தின் கதை”The Story of Seaside Village” என்று ஆங்கிலத்திலும் மற்றும் ஜெர்மன் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Colachel Azheem
Leave a Reply

%d bloggers like this: