பெரம்பலூரில் நேற்று டி.ஆர். பாரிவேந்தரை ஆதரித்து தொல்.திருமாவளவன் பிரச்சாரம்.

பெரம்பலூரில் நேற்று டி.ஆர். பாரிவேந்தரை ஆதரித்து தொல்.திருமாவளவன் பிரச்சாரம்.


தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பெரம்பலூரில் தொல்.திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி இந்துக்களுக்கு செய்த ஒரே நலத்திட்டம் பண மதிப்பிழப்புதான். இந்துக்களின் காவலன் என்று கூறும் மோடி ஜி.எஸ்.டி. மூலம் இந்துக்களை வஞ்சித்து விட்டார். மோடியும், ராமதாசும் இந்துக்களை ஏமாற்றியவர்கள்.

பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வுடன் பேரம் பேசி கூட்டணி வைத்துள்ளன. பா.ஜ.க., அ.தி.மு.க.வை மிரட்டி பணிய வைத்து கூட்டணியில் சேர்ந்துள்ளது. கஜா புயலின் போது மோடியும், அமித்ஷாவும், ராஜ்நாத்சிங்கும் தமிழகம் வந்தார்களா? ஆனால் இன்று ஓட்டுக்காக வந்து உங்கள் முன் நிற்கிறார்கள். நீட் பிரச்சினையில் தொடங்கி, காவிரி நீர் பங்கீடு வரை தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மோடியை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் வேண்டாம் மோடி. இந்த தேர்தலுடன் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற ஒரே கொள்கையில் எந்த முரண்பாடும் இல்லாத ஒரே கூட்டணி தி.மு.க. கூட்டணி. எனவே பாரிவேந்தருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அப்போது தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினத்தந்தி

123total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: