பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக ஆசிரியர்கள் குறித்த விபரங்களை நவம்பர் 25ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சமீபத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமாா் 3.2 லட்சம் ஆசிரியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

தற்போது ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ‘க்யூஆா் கோடு’ வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பெயா், முகவரி, செல்போன் எண், இரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளைச் செய்யத் தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: