பண்ருட்டி மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து போராட்டம்

பண்ருட்டி மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்காததை கண்டித்து போராட்டம்


பண்ருட்டியில் சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் ரெயில்கள் செல்லும்போதெல்லாம் பண்ருட்டியில் ரெயில்வே கேட் மூடப்படும். அந்த சமயத்தில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் பண்ருட்டி நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாணவ-மாணவிகளும் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்தனர். எனவே பண்ருட்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சுமார் ரூ.20 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

ஆனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. சர்வீஸ் ரோடு அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால், இதுவரை சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. இதன் காரணமாக மேம்பாலத்தின் இருபுறமும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சர்வீஸ் ரோடு அமைக்கக்கோரி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும், சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை.

இந்த நிலையில் பண்ருட்டியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய குடியரசு கட்சி அர்ஜுனன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் அர்ஜுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஷேக் நூர்தீன், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேல்முருகன், மக்கள் நீதி மய்யம் நகர தலைவர் முத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் அஜிஸ்கான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாபர், தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் யூனுஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நகர தலைவர் ஷேக்பாபு, இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட தலைவர் சவுகத்அலி மற்றும் பல்வேறு அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், ரத்தின பிள்ளை மார்க்கெட் காய்கறி வியாபாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பண்ருட்டி மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் சர்வீஸ் ரோடு உடனடியாக அமைக்கக்கோரி அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுப்பது, சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்த அனைத்து கட்சி சார்பில் போராட்டக்குழு அமைப்பது, சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடம் போதுமானதல்ல.

எனவே கூடுதல் இடத்தை கையகப்படுத்தி சர்வீஸ் ரோட்டை அகலமாக அமைக்காவிட்டால் அனைத்து கட்சி சார்பில் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முன்னாள் கவுன்சிலர் சோழன் நன்றி கூறினார். கூட்டம் முடிந்ததும் சர்வீஸ் ரோடு அமைப்பது தொடர்பான மனுவும், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலும் பண்ருட்டி தாசில்தார் உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

கடலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: