அபுதாபியில் தினமும் 30,000 பேர் பங்கு பெறும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

அபுதாபியில் தினமும் 30,000 பேர் பங்கு பெறும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!


ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் வந்தால் கூடுதல் பரபரப்பு வந்துவிடும். தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இரவில் சிறப்புத் தொழுகைகள் தொழுவதும், பிந்திய இரவில் சஹர் உணவு சாப்பிடுவதென்று இரவு நேரம் பரபரப்பாகவே அதாவது பகலைப் போலவே காட்சி தரும். ரமலான் காலங்களில் தனியார் நிறுவனங்களின் வேலை நேரமும் 6 மணிநேரமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என அரசும் அறிவுறுத்துகின்றது. இதனால் ரமலான் மாதமென்றால் அமீரகம் புதுப் பொழிவுடன் காட்சி தரும்.

நோன்பு வைத்த ஒவ்வொரு முஸ்லிமும் மாலை சூரியன் மறையும் நேரத்தில் நோன்பு திறப்பார்கள். அமீரகத்தில் நோன்பு திறப்பதற்காகப் பல தனியார் நிறுவனங்கள், சாரிட்டி அமைப்புகள் மற்றும் அரசு சார்பிலும் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில்  பெரிய திடல் அமைக்கப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அபுதாபியிலுள்ள சேக்ஜாயித் கிராண்ட் மஸ்ஜித் என்னும் பள்ளிவாசலில்தான் தொடர்ந்து இந்த இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இப்தார் நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்து கொண்டு நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதாவது 30,000 பேர் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் வகையில் சேக்ஜாயித் கிராண்ட் மஸ்ஜித் இப்தார் திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு உணவு தயார் செய்வதற்காக மட்டும் 350 நபர்கள் சமைக்கின்றனர்.

ஒரு நாள் இப்தாருக்கு மட்டும் 7,000 கிலோ அரிசி, 7,000 கிலோ காய்கறிகள், 10,000 கிலோ கோழிக்கறி, 6,000கிலோ ஆட்டுக்கறி செலவாகின்றது என்று தெரிவிக்கின்றனர். ஒரு நாளுக்கு மட்டும் இவ்வளவென்றால் முப்பது நாட்களுக்கு எவ்வளவாகும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

இது போலவே துபாய் டேராவில் குவைத் பள்ளி என்று தமிழர்களால் அழைக்கப்படும் பள்ளிவாசலிலும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. துபாயில் பல பள்ளிவாசல்களிலும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் இந்த குவைத் பள்ளிக்குத் தனிச்சிறப்புண்டு. அதாவது நமது தமிழக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க நோன்புக் கஞ்சி பரிமாறுவது போல இந்தப் பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி பரிமாறுவது கூடுதல் சிறப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் வெளிநாட்டினரது எண்ணிக்கையே அதிகம். இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சைனா, பிளிப்பைன், இந்தோனேசியா என பல நாடுகளிலிருந்து மக்கள் வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் அமீரகத்திலுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: