வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.

வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தனியார் பள்ளி வேனும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 9 மாணவர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி வேன் அருகாமையில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் அரசடிக்காடு, பூலாம்பாடி பகுதியிலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை காலை பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராதவகையில் தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், விகாஷ் (11), மகேஸ்வரி (12), ரகுநாத் (11), சன்மதி (6), தரனேஷ் (8), உள்பட 9 மாணவ, மாணவிகள், வேன் ஓட்டுநர் வேப்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (27) வெங்கனூரைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி (30) ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும், அரசுப் பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டம், வீரகனூரைச் சேர்ந்த தேன்மொழி (40), கெங்கவல்லியைச் சேர்ந்த தாரணி ( 33), ஆணையம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (45) உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பள்ளி வேன் ஓட்டுநர் சத்தியராஜை பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: