தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் வரை சம்பா, தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் கடைமடை பகுதியான பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளிலும், உய்யகொண்டான் வாய்க்கால் பாசன பகுதியான பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. தஞ்சை- மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், துறையுண்டார்கோட்டை பகுதிகளில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இந்த நிலையில் 2-வது நாளாக விடிய, விடிய மழை பெய்ததால் மேலும் பல இடங்களில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் அருகே உள்ள சமுத்திரம் ஏரி தொடர் மழையினால் நிரம்பி வழிகிறது.

தஞ்சையை அடுத்த வரவுக்கோட்டை, துறையுண்டார்கோட்டை, சித்திரக்குடி, களிமேடு, சக்கரசாமந்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. பல இடங்களில் 1 அடி உயரத்துக்கும் மேல் மழைநீர் தேங்கி காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் 800 ஏக்கரில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி காணப்படுகின்றன. கரும்புகள் சாயாமல் இருப்பதற்காக 4 அல்லது 5 கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் கரும்புகள் மழைக்கு சாய்ந்து விட்டன.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் வடிகால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் தேங்குவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply

%d bloggers like this: