நவீனத் தொழில் நுட்பத்தில் காய்கறிச் சாகுபடி.

1219

நவீனத் தொழில் நுட்பத்தில் காய்கறிச் சாகுபடி.


நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுவது, இஸ்ரேல் நாட்டைத்தான். நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில்… இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. கொய்மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்-பழநி சாலையில் உள்ள ரெட்டியார்சத்திரம் எனும் கிராமத்தில் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில், ‘இந்தோ-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையம்’ அமைந்துள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மையத்தில் விதவிதமான பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளியில் பிளாஸ்டிக் மூடாக்கு போட்டு மிளகாய், கத்திரிக்காய், முலாம்பழம் போன்றவற்றைச் சாகுபடி செய்துள்ளனர் காய்கறி மகத்துவ மையத்தினர். விவசாயிகளுக்குத் தேவையான காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் விற்பனை செய்கிறார்கள்.

காய்கறி மகத்துவ மையத்தின் திட்ட அலுவலர், சீனிவாசனிடம் இந்தப் பயிற்சி மையம் குறித்துப் பேசினோம். மையத்தின் அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்று காட்டியபடி பேசினார் சீனிவாசன்.

“இந்தியா, இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் ஏழு இடங்களில் இதைப்போன்ற மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு மையமும் ஒவ்வொரு பயிரை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், காய்கறிச் சாகுபடியை மையமாகக் கொண்டது. நம் விவசாயிகள் காய்கறிச் சாகுபடியில் உயர் மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. 10.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2013-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016-ம் ஆண்டுக் கட்டடப் பணிகள் நிறைவடைந்தன. இங்கு பாலி ஹவுஸ், ஹைடெக் பாலி ஹவுஸ், நெட் ஹவுஸ், உயர் தொழில்நுட்பத்தில் திறந்தவெளிச் சாகுபடி ஆகியவை குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தற்போது 910 சதுர அடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைடெக் பாலிஹவுஸ் அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது.

முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் இந்த பாலிஹவுஸில் நாற்றுகள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதில் 65 லட்சம் நாற்றுகள் வரை உற்பத்தி செய்ய முடியும். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், அதிகாரபூர்வ திறப்புவிழா நடைபெறும்.

பசுமைக்குடில் விவசாயம் என்றாலே அதிகச்செலவாகும் என்பதுதான் விவசாயிகளின் எண்ணமாக இருக்கிறது. பயிர்களைப் பூச்சிகளிடமிருந்து காப்பாற்றி, தேவையான தட்பவெப்பத்தைப் பயிர்களுக்குக் கொடுப்பதுதான் பசுமைக்குடிலில் நடக்கிறது. ஆனால், பசுமைக்குடில் அமைக்க வேண்டும் என்பதில்லை. நம் பொருளாதாரத்துக்கேற்ப பல வகையான குடில்களை அமைக்கலாம் என்பதை இங்கு செயல்படுத்திக்காட்டியிருக்கிறோம். வெறும் வலையை வைத்துக் குறைந்த செலவில் பந்தல் அமைத்துக்கூடச் சாகுபடி செய்யலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு. திறந்தவெளிச் சாகுபடியைவிட, ஒரு வலைக்குள் பயிரை வளர்க்கும்போது, பூச்சி, நோய் தாக்குதல் குறைவதுடன், அதிக மகசூல் கிடைக்கிறது. இதற்கான மாடல் இங்கேயிருக்கிறது. வேலை நாள்களில் இதனை விவசாயிகள் வந்து பார்வையிடலாம்.

திறந்தவெளிச்சாகுபடி முறையில் ஒரு ஏக்கருக்கு 20 டன் தக்காளி மகசூல் ஆகிற நிலத்தில், பசுமைக்குடில் அமைத்துச் சாகுபடி செய்யும்போது 54 டன் மகசூல் கிடைக்கிறது. சொட்டுநீர், மல்ச்சிங் ஷீட் (மூடாக்கு), வலைப்பந்தல், பசுமைக்குடில் போன்றவற்றை எந்தெந்தக் காய்கறிப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் கற்றுக்கொடுக்கிறோம். மிளகாய், தக்காளி நாற்றுகளை விற்பனை செய்கிறோம். குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யும் நாற்றுகளை டிரேயுடன் கொடுக்கிறோம். 98 குழிகள் கொண்ட ஒரு டிரே மிளகாய் நாற்று, நூறு ரூபாய் என விற்பனை செய்கிறோம். இந்த மையத்தில் பயிற்சி அறை மற்றும் விவசாயிகள் தங்குவதற்கான வசதிகளும் உள்ளன. முன் அனுமதி பெற்று விவசாயிகள் குழுவாக வந்தும் பயிற்சி பெற்றுச் செல்லலாம். இதுவரை இந்த மையத்துக்கு 12,800 விவசாயிகள் வந்து பார்வையிட்டு, ஆலோசனை மற்றும் பயிற்சிகளைப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். 1,300 மாணவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். இந்த மையத்தின் மூலம் 50 லட்சம் காய்கறி நாற்றுகளை, இதுவரை உற்பத்தி செய்து விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம்.

காய்கறிச் சாகுபடியில் உலக அளவில் உள்ள அனைத்து உயர் தொழில்நுட்பங்களையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். விதைத் தேர்வு, நாற்று உற்பத்தி, நிலம் தயாரிப்பு, நடவு, களை கட்டுப்பாடு, பாசன முறை, சாகுபடி எனக் காய்கறிச் சாகுபடியில் உள்ள அனைத்தையும் உயர் தொழில்நுட்ப முறையில் செயல்படுத்தக் கற்றுக்கொடுப்பதும், ஆலோசனைகள் வழங்குவதும் இந்த மையத்தின் முக்கியப் பணிகள்” என்ற சீனிவாசன் நிறைவாக, “வழக்கம்போல விதைத்து, வளர்த்து, அறுத்து விற்றுவிட்டுக் கடைசியில் நஷ்டம் எனப் புலம்பாமல், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது மகசூல் அதிகமாகிறது, செலவு குறைகிறது. இதை இங்கு சாத்தியமாக்கியிருக்கிறோம்.

இதை நேரில் பார்வையிடும் விவசாயிகள் இதனால் ஈர்க்கப்பட்டு, இந்தத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். எதிர்காலச் சூழலைக் கருத்தில்கொண்டு, குறைந்த தண்ணீர் மற்றும் ஆள்களைக்கொண்டு, செலவு குறைவான முறையில் காய்கறிச் சாகுபடியில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கானதுதான், இந்த மையம். அப்படிப்பட்ட விவசாயிகளுக்காக இந்த மையத்தின் கதவு திறந்தேயிருக்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு, சீனிவாசன், செல்போன்: 94434 55477.

நன்றி – pasumaivikatan
%d bloggers like this: