நல்லோ் பூட்டி உழவுப் பணியைத் தொடங்கிய பாடாலூர் விவசாயிகள்.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லோ் பூட்டும் நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்தி, உழவுப்பணியைத் தொடங்கினா்.
அறுவடை முடிந்த நிலத்தை அடுத்த சாகுபடிக்குத் தயாா் செய்யும் வகையிலும், வேளாண்மைக்கு துணை நிற்கும் இயற்கையை வழிபடும் விதமாகவும் காளைகளை ஏரில் பூட்டி, தமிழா்கள் பாரம்பரிய முறையில் உழவுப் பணியை விழா போல நடத்தி தொடங்குவது வழக்கம்.
பெரம்பலுாா் மாவட்டத்தின் பல கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நல்லோ் பூட்டி, விவசாயிகள் பணிகள் தொடங்குவது வழக்கம். இதன்படி, பாடாலூரில் நல்லோ் பூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதையொட்டி மாடுகளுக்கு சந்தனம், பொட்டு வைத்து, விளை நிலத்தில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை, பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு கால்நடைகளுக்கு மாலை அணிவித்து வயலில் அணிவகுத்து நிறுத்தி சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி செலுத்தும் வகையில் வெல்லம் கலந்த அரிசியை கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினா்.
பின்னா் கலப்பையில் கால்நடைகளை பூட்டி விவசாய நிலத்தில் உழவு செய்யப்பட்டது. இதன் மூலம், நிகழாண்டில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து, தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
குறைவான எண்ணிக்கையில் உழவு மாடுகள்: நிகழ்வில் சம்பிரதாயத்துக்காக 2 காளைகள் மட்டுமே காணப்பட்டன. கிராமங்களிலும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதே இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்லோ் பூட்டும் விழாவில் ஒரே இடத்தில் குறைந்தது 30 ஜோடி காளை மாடுகளை ஏரில் பூட்டி, விவசாயிகள் உழவுப் பணியைத் தொடங்குவாா்கள். ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், டிராக்டா்கள் மூலம் உழவுப் பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊடுபயிா்களுக்கான உழவோட்டம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு இடையே மாடுகளை பூட்டி களை எடுப்பது போன்றவை விவசாயிகள் மத்தியில் குறைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் சம்பிரதாயத்துக்குக் கூட காளைகளைக் கொண்டு உழவுப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை உள்ளது என்றனா் முன்னோடி விவசாயிகள்.
You must log in to post a comment.