அரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி 4 வாலிபர்கள் பலி

Hits: 9

அரியலூர் அருகே லாரி ஏறியதில் உடல் நசுங்கி 4 வாலிபர்கள் பலி


அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் மகன் அஜித்குமார்(வயது 19), ராமச்சந்திரன் மகன் சதீஷ்குமார்(20), அன்னபோஸ்ட் மகன் விக்னேஷ்(19), பழனிசாமி மகன் ஹேராம்(19). இவர்கள் 4 பேரும் ஒரே மொபட்டில் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்காக வி.கைகாட்டியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளனர். சதீஷ்குமார் மொபட்டை ஓட்டினார்.

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெளிப்பிரிங்கியம் அருகே உள்ள மயிலாண்டகோட்டை என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருவண்ணாமலை மாவட்டம், நீபாதுறையை சேர்ந்த சின்னசாமி மகன் மதியழகன்(34), விருத்தாசலம் மங்களப்பேட்டையை சேர்ந்த சாமியப்பன் மகன் மணிகண்டன்(29) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விபத்து

இந்நிலையில் சதீஷ்குமார் உள்பட 4 பேர் சென்ற மொபட்டும், மதியழகன் உள்பட 2 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும்  எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. சாலையின் நடுவே  இருந்த மேடு, பள்ளத்தில் ஏறி இறங்கியபோது விபத்து நடந்துள்ளது. இதில் மொபட்டில் இருந்த அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ், ஹேராம் ஆகியோர் சாலையின் நடுவே விழுந்ததில் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த மதியழகன், மணிகண்டன் ஆகியோர் சாலையோரத்தில் விழுந்து படுகாயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்களை ஏற்றி கொண்டு வி.கைகாட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று சாலையின் நடுவே படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ், ஹேராம் ஆகிய 4 பேரின் மீதும் ஏறி இறங்கியது. இதையடுத்து லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். லாரியின் சக்கரங்கள் ஏறி, இறங்கி சென்றதில் அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை 3 பேரையும் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹேராம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் மதியழகன், மணிகண்டன் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெளிப்பிரிங்கியம், வி.கைகாட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இறந்தவர்களின் உடல்களை, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

விபத்தில் பலியான அஜித்குமார், சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம், கீழநத்தத்தை சேர்ந்த ரகுபதியை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தினத்தந்தி
Leave a Reply