ஜெயங்கொண்டம் அருகே நகை திருடியவர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே நகை திருடியவர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து நகை திருடிய திருடர்கள் வாகன சோதனையில் பிடிபட்டனர். இதில் 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

இரவாங்குடி ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் மாதவன்(35). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு லாரியில் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். மாதவனின் மனைவி இன்பநிலா(30). இவர் கடந்த 8ம்தேதி தனது ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த அரை பவுன் தோடு, அரை பவுன் மாட்டல் மற்றும் 60 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி எஸ்ஐ செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் மீன்சுருட்டி அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு சப்- இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மூன்று பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மூவரையும் பிடிக்க முயன்றபோது இருவர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்டவர்களிடம் விசாரனை செய்ததில் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் தெற்கு தெருவை சேர்ந்த தாமரை செல்வன்(34), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன்(28) என்பது தெரியவந்தது. விசாரணையில இரவாங்குடி கிராமத்தில் இன்பநிலா வீட்டில் மூவரும் சேர்ந்து திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்களிடமிருந்து இரும்பு பாறை, நெம்புகோல், திருப்புளி, கையுறை மற்றும் மயக்கம் ஏற்படுத்தும் மர்ம விதைகள் ஆகியவற்றை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை மீன்சுருட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினகரன்


அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: