தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும்

தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும்


தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்– 2019 தேதி அறிவித்து முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:–


பொதுக்கூட்டம் நடத்திட அனுமதிக்கப்பட்ட மைதானங்கள் அல்லது ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பாகுபாடின்றி பயன்படுத்துவதற்கு அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தேர்தலின் பொது பிற கட்சியினர் மற்றும் அவர்களது வேட்பாளர்களின் கொள்கைகள், முந்தைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை மட்டுமே விமர்சிக்கலாம். தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து காவல் துறையினருக்கு முன்பே தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தடை ஏதும் முன்பே விதிக்கப்பட்டிருப்பின் அதை பின்பற்ற வேண்டும்.


மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. வெள்ளம், பஞ்சம் அல்லது இன்ன பிற இயற்கை இடர்பாடு காலங்களில் துயர்துடைப்பு பணி செய்திட தடையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தல் ஆணைய முன்அனுமதியுடன் பண உதவி செய்வதற்கும் தடை இல்லை.


அலுவலக பணிகளோடு தேர்தல் பிரசார பணிகளை இணைக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்ய கூடாது என்று அவர் கூறினார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினத்தந்தி

23total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: