தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி.

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி.


பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் வங்கியாளர்கள் நுண் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் வகையிலான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 652 வாக்குச்சாவடிகளில் 83 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 5 வாக்குச்சாவடிகள் நெருக்கடியானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூரில் 36 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 4 நெருக்கடியான வாக்குச்சாவடிகளும், குன்னத்தில் 47 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 1 நெருக் கடியான வாக்குச்சாவடியும் அடங்கும்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இந்த 88 வாக்குச்சாவடி மையங்களிலும் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்கள் முன்னிலையில் தான் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். எனவே நுண் பார்வையாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துவிட வேண்டும்.

பின்னர் மாதிரி வாக்குப் பதிவு நடந்து முடிந்தவுடன் மின்னணு எந்திரத்தில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்பதை உறுதி செய்தபின் தேர்தல் பொதுப்பார்வையாளருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளை அழித்துவிட்டு வாக்காளர்களின் வாக்குப்பதிவிற்கு தயார் நிலையில் வைக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் வந்துவிட்டார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். வாக்களிக்க வரும் வாக்காளர் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை எடுத்து வருகிறாரா? என்பதை வாக்குச்சாவடி அலுவலர்கள் முறையாக கண்காணிப்பதை நுண்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்று வாக்குப்பதிவு நாளன்று நுண்பார்வையாளர்கள் எந்தெந்த நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கும் வகையில் உங்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக அறிந்து கொண்டு சிறப்புடன் பணியாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

63total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: