வேப்பந்தட்டை அருகே தீவனப்புல்லில் பூச்சி மருந்து வைத்து 6 மாடுகள் கொலை

வேப்பந்தட்டை அருகே தீவனப்புல்லில் பூச்சி மருந்து வைத்து 6 மாடுகள் கொலை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன்விரோதத்தில் வியாழக்கிழமை இரவு தீவனப்புல்லில் விஷம் வைத்து மாடுகளை கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி கை.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (58). விவசாயி. இவர், அதே பகுதியில் உள்ள காட்டுக்கொட்டகையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மேலும், தனது வயலிலேயே கொட்டகை அமைத்து 10 மாடுகள், 96 ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ரெங்கசாமியின் ஆடு வயலில் மேய்ந்து விட்டதாகக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் ரெங்கசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ரெங்கசாமி குடும்பத்துக்கும், ராமர் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை ரெங்கசாமி தனது மாடுகளுக்கு தீவனப்புல்லை அறுத்து போட்டாராம்.

இதை சாப்பிட்ட ஒரு எருது, 3 பசுமாடு, 2 கன்று குட்டிகள் என 6 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன.

இதைத்தொடர்ந்து, ரெங்கசாமி அரசு கால்நடை மருத்துவர் ரவிக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து, தனது மாடுகளை விஷம் வைத்து கொன்றதாக ராமர், சின்னசாமி உள்ளிட்ட 14 பேர் மீது கை.களத்தூர் காவல் நிலையத்தில் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: