குன்னம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன். அவர்களில் மூத்த மகள் சிவரஞ்சனி நல்லறிக்கையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி சமைத்து வைக்குமாறு சிவரஞ்சனியிடம் பெற்றோர் கூறிவிட்டு வயல் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிவரஞ்சனி வீட்டின் அருகில் உள்ள காலிமனைக்கு சென்று உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சிறுமியை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிவரஞ்சனி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.
இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
You must log in to post a comment.