பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு.

பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு.


தமிழ்புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அதிகாலையில் எழுந்து பக்தர்கள் குளித்து கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தனர். இதனால் ஏராளமான கோவில்களில் காலை நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 58-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது.

தொடர்ந்து விகாரி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேசுவரி, கணபதி, முருகன், காசிவிஸ்வநாதர், அன்னபூரணி மூலவர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மேலும் சந்திரசேகரர்- ஆனந்தவல்லி அம்பாள், பஞ்சமூர்த்திகள், மாரியம்மன், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் உற்சவ மூர்த்திகள் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டு உற்சவ சிலைகளுக்கு அபிஷேகமும், பகலில் சுவாமிக்கு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் சந்திரசேகரர்-ஆனந்தவல்லி அம்பாள் உற்சவ மூர்த்திகளின் வீதிஉலா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.


அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதில் பெரம்பலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் ராஜாராம், விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் வள்ளிராஜேந்திரன், புன்னகை மன்ற செயலாளர் சோழா அருணாசலம், என்ஜினீயர் மோகன்ராஜ், கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், நகர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.


இதேபோல் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. தாயாருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அதிகாலை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது. பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

64total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: