தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு பெரம்பலூரில் விற்பனை!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு பெரம்பலூரில் விற்பனை!


பெரம்பலூர் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

லாட்டரி சீட்டு வாங்கி பரிசு விழாமல் பணத்தைப் பறிகொடுத்த பல ஏழை, எளிய நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் கடனாளியாகி உயிரிழந்த சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இதையடுத்து, பாதிப்புக்குள்ளான மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினரின் கோரிக்கையால் கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தடை விதித்தார். அதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநில லாட்டரி சீட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஏழை, எளிய குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

கள்ளச்சந்தையில் விற்பனை:

லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. அரசியல்வாதிகள், காவல் துறையினரின் ஆதரவுடன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்கிறது. முகவர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப லாட்டரி சீட்டுகளின் எண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருந்து முகவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதை, அவர்கள் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து வெள்ளைத் தாளில் அச்சிட்டு எடுத்துக் கொள்கிறார்கள்.

லாட்டரி சீட்டு வாங்க வருபவர்களுக்கு வெள்ளைத் தாளில் சீட்டின் எண், முக மதிப்பு, லாட்டரி சீட்டின் பெயரை குறிக்கும் எழுத்து ஆகியவற்றை மட்டும் எழுதி கொடுத்து விடுகிறார்கள். குறைந்தபட்ச முகமதிப்பாக ரூ. 60 தொடங்கி ரூ. 100, ரூ. 200 என விற்பனை செய்யப்படுகிறது. லாட்டரியில் பரிசு விழுந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு பரிசுத் தொகையும் முகவர் மூலம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் நகரில் நாள்தோறும் லட்சக்கணக்கான மதிப்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களையும், கூலித் தொழிலாளர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

காலை 7 மணிக்கு லாட்டரி சீட்டு விற்பனை தொடங்குவதால் அவற்றை வாங்குவதற்காக தொழிலாளர்கள் சென்றுவிடுகின்றனர். ரோந்து செல்லும் போலீஸார் அதைக் கண்டுகொள்வதில்லை எனவும், சில போலீஸாரே லாட்டரி சீட்டுகளை வாங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு இந்த விவகாரத்தை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, ஏழைகளின் பணத்தை சுரண்டும் லாட்டரி விற்பனையை தடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மாவட்ட செய்திகளை படிக்க பெரம்பலூர் மாவட்டம்

தினமணி

85total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: