தடுப்புகள் அமைத்து சோதனை செய்ததில் 121 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, 121 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் பெரம்பலூர் நகரில் பல இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சர்வ சாதாரணமாக அடிக்கடி சாலைகளில் உலா வந்தனர். கடந்த சில நாட்களில் போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலன் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் 10 மணிவரை காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் தடுப்புகளை வைத்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய காரணங்கள் இன்றியும், வெளியே பயணம் செல்வதற்கு தகுந்த இ-பதிவு சான்று இல்லாமலும் சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
121 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெரம்பலூர் நகரில் பாலக்கரை ரவுண்டானா, நான்கு சாலை சந்திப்பு, மூன்று ரோடு, வேப்பூர், குன்னம், வி.களத்தூர், வாலிகண்டபுரம் ஆகிய இடங்களிலும் இது போன்று சோதனைகளை போலீசார் மேற்கொண்டனர். ஒரே நாளில் மட்டும் சுமார் 121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.