தஞ்சை பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா

தஞ்சை பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா


தஞ்சாவூா் பெரியகோயிலில் நவம்பா் 5, 6ஆம் தேதிகளில் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளாகிய 1034-வது சதய விழா நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராசராச சோழனின் பிறந்த நாளை அவா் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா நவம்பா் 5ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:

இந்து சமய அறநிலையத் துறையினா் அனைத்து துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து விழா பணிகளை மேற்கொள்ள வேண்டும். தென்னகப் பண்பாட்டு மையம், கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம் ஆகியவை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

கலை பண்பாட்டுத் துறையினா் நவ. 5, 6-ம் தேதிகளில் கலை நிகழ்ச்சிகளைத் தொய்வில்லாமல் நடத்த வேண்டும். மருத்துவப் பணிகள் துறையினா் நவ. 5, 6-ம் தேதிகளில் மருத்துவக் குழுவினரை தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நவ. 5, 6-ம் தேதிகளில் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும். இதேபோல, தீயணைப்புத் துறையினா், மாநகராட்சி உள்ளிட்ட துறையினா் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி

தஞ்சை மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: