பெரம்பலூரில் நடைபெற்ற சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூரில் நடைபெற்ற சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம்


சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதர்களால் அதிகளவிலான குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகினறன என்றார் சென்னையில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான குற்ற விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி. லிங்கேஸ்வரன்.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கான சைபர் கிரைம் சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை வகித்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி மேலும் பேசியது:

நாம் அனைவரும் சட்டைப் பையில் செல்லிடப்பேசி என்னும் ஒற்றனை எடுத்துச்செல்கிறோம். அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில், நாம் அனைவரும் அதற்கு அடிமையாகி விடுவோம். 18 வயதுக்குள்பட்டோர் அனைவரும் குழந்தைகளே. சைபர் குற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.

இந்தக் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும், அதற்கான தண்டனை வழங்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. கணினி மூலமாக அல்லது அதை பயன்படுத்தியோ அல்லது ஒரு தாக்குதலுக்கான ஒரு புள்ளியாக பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் கிரைம் எனப்படும்.

குழந்தைகள் எளிதில் ஒரு குற்றத்துக்கு ஆளாகிவிடக் கூடியவர். எளிதில் உணர்ச்சி வசப்படுவர், நம்பப்படக் கூடியர்கள், பகுத்தறிந்து எதுவும் செய்யமுடியாதவர்கள். குழந்தைகள் விபரீதம் தெரியதாவர்கள் என்பதால், பெண் குழந்தைகளிடம் கொடுக்கல், வாங்கல் எனும் மனப்பான்மையை ஏற்படுத்தி அவர்களை அடைய நினைப்பவர்கள் தான் இளைஞர்கள். கலாசாரத்தில் தமிழகம் உயர்ந்து நிற்கிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிபதிகள் தெளிவாக செயல்பட்டு வருகின்றனர். சுயக்கட்டுபாடு இல்லாத மனிதனால் அதிக குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சுயக்கட்டுபாடு உள்ளவர்களால் எவ்விதமான தவறுகளையும் செய்ய இயலாது. எனவே, அனைவரும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் நீதிபடி லிங்கேஸ்வரன்.

தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, வழக்குரைஞர் ஜி. பாபு, கல்லூரி முதல்வர் எச். அப்ரோஸ் ஆகியோர் பேசினர்.

கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீலராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கண்ணன் ஜெகதலன் கிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக, வணிகவியல்துறை மாணவி விசாலி வரவேற்றார். தடயவியல்துறை மாணவி நஸ்ரின் நன்றி கூறினார்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: