சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் முதிர்ச்சியான ஆட்டத்தால் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் முதிர்ச்சியான ஆட்டத்தால் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்!


ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக ஆடி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் வெற்றியில் தோனியின் சரியான திட்டமிடலும், முக்கியமான போட்டியில் வீறு கொண்டு எழுந்த அனுபவ வீரர்கள் பாப் டு ப்ளேசிஸ் – ஷேன் வாட்சன் முக்கிய பங்கு வகித்தனர்.

டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். தோனி பந்துவீச்சாளர்களை வழக்கம் போல தீபக் சாஹர், பின் ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் சுழல் என பயன்படுத்த, டெல்லி பேட்ஸ்மேன்கள் திக்குத் தெரியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.

துவக்க வீரர் ப்ரித்வி ஷா சாஹர் பந்துவீச்சில், தோனி கேட்ட டிஆர்எஸ் ரிவ்யூ மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து தவான் 18, மன்றோ 27, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ரிஷப் பண்ட் 38 ரன்கள் சேர்த்தனர்.

பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி இரு பந்துகளில் இஷாந்த் சர்மா ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை எட்டியது டெல்லி அணி.

சென்னை அணியில் ஹர்பஜன், சாஹர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். தாஹிர் 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து சேஸிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் வாட்சன் – டு ப்ளேசிஸ் அபார துவக்கம் அளித்தனர். இவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறிய டெல்லி அணி வெற்றியை அங்கேயே கோட்டை விட்டது.

இருவரும் நிதானமாக ஆடத் துவங்கி, பின் கடுமையான அதிரடிக்கு மாறினர். சரியாக அரைசதம் அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வெற்றியை நெருங்கிய போது, ரெய்னா 11, தோனி 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராயுடு ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை தாண்டியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை.

அனுபவ வீரர்கள் கொண்ட தோனியின் சென்னை அணியை மீறி டெல்லி அணி எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது தான் இந்தப் போட்டியின் சோகம். இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது சென்னை.

375total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: