ஜெயங்கொண்டம் அருகே சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

ஜெயங்கொண்டம் அருகே சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு, பொதுமக்கள் சாலை மறியல்


ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு சுடுகாட்டில் நகராட்சி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தில் 1-வது வார்டு, 2-வது வார்டு, விருத்தாசலம் ரோடு, ஜீப்ளி ரோடு, காமராஜர் சிலை, அடிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 4 சமுதாய மக்களுக்கான சுடுகாடு ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள கீழக்குடியிருப்பு பகுதியில் உள்ளது.


அந்த சுடுகாட்டில் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு ஜல்லிக்கற்கள், மணலை நேற்று முன்தினம் இரவு அங்கு இறக்கியுள்ளனர். இதனை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள், சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டிற்கு எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அப்போது அவர்கள் கூறுகையில், “சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். இந்த நிலையில் சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு இரவோடு, இரவாக ஜல்லிக்கற்களை, மணலை நகராட்சியினர் இறக்கியதற்கு கண்டிக்கிறோம்” என்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், வெங்கடேஷ்பாபு (போக்கு வரத்துறை) உள்பட போலீசார் மற்றும் நகராட்சி மேலாளர் அரங்கபார்த்திபன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பிளஸ்-2 தேர்வு நடப்பதால் பள்ளி வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் பொதுமக்களிடம் கேட்டு கொண்டார். அப்போது பெரும்பாலான பொதுமக்கள் உடனே எழுந்து பள்ளி வாகனங்கள் சென்ற பிறகு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


மேலும் சுடுகாட்டில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள், மணலை அள்ளும் வரை பொதுமக்களில் சிலர் சாலையோரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து நகராட்சியினர் சுடுகாட்டில் கொட்டப்பட்ட மணல், ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து, அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினத்தந்தி

26total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: