சிறுவாச்சூரில் ரெயிலை போலவே தொடக்கப்பள்ளி.

சிறுவாச்சூரில் ரெயிலை போலவே தொடக்கப்பள்ளி.


பள்ளிக்கூடத்திற்கு ரெயிலில் போயிருப்போம். ரெயிலே பள்ளிக்கூடமா இருந்தா! ரெயிலை போன்று வர்ணம் தீட்டப்பட்டுள்ள சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியின் சுவரை வியப்புடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் அரசு நிதி உதவி பெறும் மானிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளியை கக்கன் ஜி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி பள்ளியை நடத்தி வருகிறார்.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் செல்வகுமார் என்னும் நிர்வாகி பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் படித்த நிறைய பேர் அரசு பணிகளுக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் பல்வேறு பணிகளுக்கு சென்றுள்ளனர். தற்போது இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் மொத்தம் 127 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ரேணுகா, இடைநிலை ஆசிரியர்கள் 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மானிய தொடக்கப்பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள் எண்ணினர்.

இதற்காக அவர்கள் நிதி திரட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கினர். இதையடுத்து அந்த ஊர் ஆதிதிராவிடர் மக்கள், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோரிடம் இருந்து சுமார் ரூ.1¼ லட்சம் வசூலானது.

இதையடுத்து அந்த தொகையில் ரூ.25 ஆயிரத்தை சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியின் பழுதடைந்த ஜன்னல், கதவுகளை சீரமைத்தும், மராமத்து பணிகளை செய்தும், பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்தனர். பள்ளி வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

ஆனால் பள்ளியின் கட்டிட சுவர் வர்ணம் தீட்டாமல் இருந்தது. தமிழகத்தில் ரெயில்வே போக்குவரத்து வசதி இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்களில் பலர் இன்னும் ரெயில் ஓடுவதை பார்த்ததில்லை. இதனால் சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியின் கட்டிட சுவருக்கு ரெயிலை போன்று வர்ணம் தீட்டினால் நிறைய மாணவ- மாணவிகள் பள்ளியில் சேர்வார்கள் என்று அவர்களுக்கு ஒரு யோசனை வந்தது.

அதற்காக ரூ.1 லட்சம் செலவு செய்து ரெயிலை போல் பள்ளியின் சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டது. அதில் ரெயில் பெட்டிகள் போல் தோற்றமும், வாசல்கள், படிக்கட்டுகளுக்கு ரெயிலில் உள்ளது போல் வர்ணம் தீட்டப்பட்டது. மேலும் பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கு பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, அதில் மாணவ- மாணவிகளுக்கு பிடித்த விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டது

இதனால் அந்த பள்ளி ஏதோ ரெயில் நிலையத்தில் வந்து ரெயில் நிற்பது போல் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு நிமிடம் நின்று வியப்புடன் பார்த்து செல்வதோடு மட்டுமின்றி, நிறைய பேர் அந்த பள்ளி சுவரில் வரையப்பட்ட ரெயில் தோற்றத்தின் முன்பு நின்று செல்போனில் “செல்பி“ எடுத்து கொண்டும், அதனை தனியாக புகைப்படமாக எடுத்து கொண்டு சமூக வலைதளங்களில் வித்தியாசமான பள்ளி என்று அதனை பகிர்ந்து வருகின்றனர். மேலும் பள்ளியை ரெயில் போல் மாற்ற உதவியவர்களையும் பாராட்டி செல்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு, தேர்தல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரெயில் போக்குவரத்து வசதி கொண்டு வரப்படும் என்று வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரெயில் போக்குவரத்து திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மானிய தொடக்கப்பள்ளியின் சுவரிலாவது ரெயில் போல தோற்றம் வரையப்பட்டுள்ளதால், அதனை மாவட்ட மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

687total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: