அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனால் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி கொண்டும், கையில் தீச்சட்டி ஏந்தி கொண்டும் முக்கிய வீதிகளின் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதேபோல அரியலூர் மேலத் தெருவில் உள்ள பெரியநாயகி அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.


கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்களின் பால்குட ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Leave a Reply

%d bloggers like this: