சாலையிலுள்ள மையத் தடுப்புகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும்.

சாலையிலுள்ள மையத் தடுப்புகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும்.

பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை மையத் தடுப்புகளில் எச்சரிக்கை பதாகைகள், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் நடைபெறுவது அன்றாட நிகழ்வாகிவிட்டன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் போலீஸாரின் அலட்சியம் ஒருவகையில் காரணம் என்றாலும், வாகன ஓட்டுநர்களும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாததே முக்கிய காரணமாகும். பெரம்பலூர்- ஆத்தூர், அரியலூர், துறையூர் சாலைகளில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளில் நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர, பேருந்துகள், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் பெரம்பலூர் – துறையூர் சாலையில் செஞ்சேரியிலும், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் மெளலானா பிரிவு சாலையிலும் மற்றும் எல்லைப்புறங்களிலும் சாலை மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, வாகன ஓட்டுநர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், எவ்வித எச்சரிக்கை பதாகைகளும் இல்லாததால், இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. மேலும், வளைவு சாலையில் எதிர்வரும்  வாகனங்கள் தெரியாததால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

ஆபத்தான வளைவு உள்ள இடத்தில் எச்சரிக்கை பதாகை மற்றும் சாலை ஓரத்தில் தடுப்புகளும் வைக்கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, செஞ்சேரி மற்றும் மெளலானா பிரிவு சாலையில் உள்ள மையத் டுப்புகளில் எச்சரிக்கை பதாகைகளோ, ஒளிரும் மின் விளக்குகளோ அமைக்காததால், இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மையத் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துகளால் இதுவரை எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து திருச்சிக்கு உருளைக் கிழங்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள தடுப்புச் சுவறில் வியாழக்கிழமை இரவு மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதியதில் தடுப்பு சுவரும், லாரியின் முன்புற பாகங்களும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: