சர்வதேச கராத்தேவில் சாதித்த இலக்கியாவுக்கு ஆலத்தூர் பிலிமிசை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

சர்வதேச கராத்தேவில் சாதித்த இலக்கியாவுக்கு ஆலத்தூர் பிலிமிசை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாட்டுக்காக தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்று சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த இலக்கியா கூறினார்.

உலக அளவில் 8 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கராத்தே போட்டி மலேசியா நாட்டில் நடைபெற்றது. கடந்த 3, 4, 5-ந் தேதிகளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக 21 பெண்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பாக பங்கேற்ற 4 பெண்களில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற சுமைதூக்கும் தொழிலாளி, கீதா தம்பதியின் மகள் இலக்கியாவும் (வயது 13) ஒருவராவார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்று வந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் தனியார் நன்கொடையாளர்களின் உதவியால் இவர் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்றார்.


பல கட்டமாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில், இந்தியாவும் உஸ்பெஸ்கிஸ்தான் நாடும் மோதிக்கொண்டன. அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த இலக்கியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இறுதி போட்டியில் தங்க பதக்கத்தை வென்ற இந்த ஏழை சிறுமியின் தந்தை முருகானந்தம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் இலக்கியாவின் குடும்பத்தாரும், பிலிமிசை கிராம மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த இலக்கியாவுக்கு பிலிமிசை கிராம மக்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி, சால்வை அணிவித்து பரிசு வழங்கினர்.


அப்போது இலக்கியா நிருபர்களிடம் கூறும்போது, ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாட்டுக்காக தங்கம் வெல்வதே எனது லட்சியம். அதற்காக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் என்னால் இந்த வறுமையிலும் சாதிக்க முடியும் என்றார்.

மேலும் மாவட்ட செய்திகள் படிக்க – பெரம்பலூர் மாவட்டம்
Leave a Reply

%d bloggers like this: