வாக்காளர் பட்டியல்

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்.

441

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தா நேற்று அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2,87,389 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,60,732 வாக்காளர்களும் என மொத்தம் 5,48,121 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் கடந்த 22-ந் தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின் பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 5,981 ஆண் வாக்காளர்களும், 6,837 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 9 வாக்காளர்களும் என 12,827 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 41 ஆண் வாக்காளர்களும், 54 பெண் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 81 ஆண் வாக்காளர்களும், 82 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 258 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,43,818 ஆண் வாக்காளர்களும், 1,50,625 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 23 வாக்காளர்களும் என மொத்தம் 2,94,466 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,32,115 ஆண் வாக்காளர்களும், 1,34,095 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 14 வாக்காளர்களும் என மொத்தம் 2,66,224 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,60,690 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இன்று (அதாவது நேற்று) முதல் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த தொடர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அப்போது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் படிவம் 6, 6ஏ, 7, 8 மற்றும் 8ஏ அளித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாக்குப்பதிவு எந்திர கிடங்கு கட்டிட பணி தொடக்கம்

முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திர இருப்பு கிடங்கின் கட்டிட பணிக்கான பூமி பூஜை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. அந்த கட்டிடப்பணிக்கான பூமி பூஜையை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர இருப்பு கிடங்கு அமைவதன் மூலம் தேர்தல் நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிக பாதுகாப்புடன் இருக்கும். மேலும் இக்கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Our Facebook Page
%d bloggers like this: