கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த நோட்டா

பல லட்சக் கணக்கான செலவில் பிரசாரம் எதுவும் செய்யாமலே கோடிக்கணக்கான மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது மேற்கண்ட எந்த வேட்பாளரும் இல்லை என்பதை குறிக்கும் நோட்டா.

நோட்டா என்ற வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை நடத்தப்பட்ட சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் நோட்டாவுக்கு மட்டும் 1,33,09,577 வாக்குகள் (அதாவது 1.33 கோடி) கிடைத்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக நோட்டா பெற்ற வாக்குகள் இவை.

2013-2017ம் ஆண்டுகளில் நோட்டா பெற்ற வாக்குகள் குறித்து தில்லியில் இயங்கி வரும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் விவரங்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, “கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1,33,09,577 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்படி மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக நோட்டாவுக்கு 2,70,616 (2.70 லட்சம்) வாக்குகள் கிடைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாத வாக்காளர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வழி வகைக் காணும் வகையில், நோட்டா என்ற வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில், கடந்த 2013ம் ஆண்டில் சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தில்லி மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல் முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் முறையிலேயே 60,02,942 வாக்குகள் அதாவது, ஒட்டுமொத்தமாக வாக்களித்தவர்களில் 1.08 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் அதாவது 46,559 வாக்குகள் கிடைத்தன.
Leave a Reply

%d bloggers like this: