கேள்விக்குறியாகும் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி

பெரம்பலூரில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி, 2018-இல் நடைபெறுமா என புத்தக ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்புத் திறனை அதிகப்படுத்தவும், பொது மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டதே இந்த புத்தகக் கண்காட்சி.

இம் மாவட்ட மக்களை பொருத்தவரை திருச்சி, சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் கண்காட்சிக்கு சென்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

கண்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டில் ரூ. 28.82 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. சிறிய நகரமான பெரம்பலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கையும், பொது மக்களின் வருகையும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்றாலும், பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.

இதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவுசெய்யப்பட்டு, மக்கள் பண்பாட்டு மையம் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் தலைவர், செயலர் மற்றும் குழு உறுப்பினர்கள் என அரசு அலுவலர்கள் உள்பட 25 பேர் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும், 2014-ல் ரூ. 1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், 2015-ல் ரூ. 1.60 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2016-ல் ரூ. 1.81 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2017-ல் ரூ. 1.70 கோடி மதிப்பிலான புத்தகங்களும் விற்பனையானது.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கும் ஜூலை மாதத்திலிருந்தே மாதந்தோறும் முன்னேற்பாட்டு பணிகளும், அதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், விழா மேடை அமைப்பது, சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை அழைப்பது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும். மேலும், அதிகளவில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பதற்காக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உண்டியல் வழங்கப்படும். அதில் சேமித்து வைக்கப்படும் தொகையைக்கொண்டு, கண்காட்சியில் புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு இதுவரை எவ்வித ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை, முன்னேற்பாட்டு பணிகளும் தொடங்கவில்லை.

7-வது புத்தகக் கண்காட்சி ஜன. 26 முதல் பிப். 4 ஆம் தேதி வரை நடைபெறும் என, கடந்த புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டது. நாள்கள் நெருங்கிவரும் நிலையில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உண்டியல்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், 7-வது புத்தகக் கண்காட்சி நடைபெறுமா என்ற சந்தேகம் புத்தக ஆர்வலர்களிடமும், மாணவர்களிடமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து புத்தக ஆர்வலர் ஒருவர் கூறியது:

ஈரோடு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு சென்று எனது குடும்பத்தினருக்கு தேவையான நூல்களை வாங்கி வந்தேன். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டதால், பெரம்பலூரிலேயே நூல்களை வங்கி வருகிறேன். 2018-ல் நடைபெறும் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளோம். இங்கு நடத்தப்பட்ட கண்காட்சியானது பள்ளி மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து புத்தகக் கண்காட்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

source: dinamani
Leave a Reply

%d bloggers like this: