பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு வழிபாடு.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு வழிபாடு.


பெரம்பலூரில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நடைபெறும்  குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி பெரம்பலூர் புனித பனிமயமாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன்பொருட்டு, கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் தேவாலயத்தில் ஒன்று கூடி, கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, நகரின் பிரதான வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, வடக்கலூர், திருமாந்துறை, திருவாளந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூர், பாடாலூர், எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் அந்தந்த ஆலயத்தில் பங்கு குருக்கள் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் மற்றும் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவைகளை சுமந்து உயிர்நீத்த தினமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாஸ்கா விழாவில் பங்கேற்க பெத்லஹேம் நகரில் நுழைந்த இயேசுவை, யூதர்களின் ராஜாவாக அறிவித்து, அவரை மக்கள் கைகளில் ஆலிவ் இலை ஏந்தி வரவேற்றனர். இந்நாளை நினைவு கூரும் வகையில், குருத்தோலை ஞாயிறாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதன்பொருட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. முன்னதாக, குருத்தோலைகளுடன் கிறிஸ்தவர்கள் ஓசானா பாடல்பாடி ஊர்வலமாகச் சென்றனர்.

அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த 2 திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மக்களும் அரியலூர் அண்ணா சிலை அருகே காலை 8 மணியளவில் திரண்டனர்.

பின்னர் அங்கு ஜெபம் செய்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலை கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். இந்த ஊர்வலமானது புது மார்க்கெட் வழியாக சத்திரம், திருச்சி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அரியலூர் மாதா ஆலயத்தில் நிறைவடைந்தது.

அங்கிருந்து தென்னிந்திய திருச்சபையை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புது மார்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு புறப்பட்டு வந்தனர். குருத்தோலை பவனியின் போது தாவீதின் மகனுக்கு ஓசானா என்பன உள்ளிட்ட கிறிஸ்தவ பாடல்களைப் பாடி ஏசுவின் சிரமங்களை கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்தனர்.

அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயத்திலும், அரியலூர் புதுமார்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ தூய ஜார்ஜ் ஆலயத்திலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலையை கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். குருத்தோலை பவனி நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதே போல் ஆண்டிமடம் அடுத்த வரதாராஜன்பேட்டை முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறே ஓசான்னா கீதத்தை முழங்கியபடி ஊர்வலமாகச் சென்றனர். அதனைத் தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்து ஞாயிறையொட்டி பங்கு தந்தை வின்சென்ட்ரோச் மாணிக்கம் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தென்னூர் அன்னை லூர்து ஆலயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயம், ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளிட்ட அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஏசுவின் பாடுகளை எண்ணி வழிபட்டனர்.

தினமணி

41total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: