குடியுரிமை

குடியுரிமை சான்றுகளை ஒப்படைக்க வந்த தொழிலாளர்களால் பரபரப்பு

459

குடியுரிமை சான்றுகளை ஒப்படைக்க வந்த தொழிலாளர்களால் பரபரப்பு.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கனகராஜ், செயலாளர் மணி ஆகியோர் தலைமையில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் குடியுரிமை சான்றுகளான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட மின்சார வாரிய அலுவலகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களை மின்வாரியத்தில் நிரந்தர பணி வழங்கிட கோரி தமிழக அரசிடமும், மின்வாரியத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றோம்.

சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்

இதனால் தமிழ்நாட்டில் வாழ தகுதியில்லாத நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட குடியுரிமை சான்றுகளை, கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

சட்டமன்ற தேர்தலுக்குள் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், தேர்தலையும் புறக்கணிப்போம், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் குடியுரிமை சான்றுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து அவற்றை வாங்க கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மறுத்து விட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மின்வாரிய அதிகாரிகள் வந்து ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் குடியுரிமை சான்றுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நூறு நாள் வேலை வழங்க கோரி…

இதேபோல் ஆலத்தூர் தாலுகா புதுஅம்மாபாளையம் ஈச்சம்பட்டியில் இருந்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், நக்கச்சேலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்களே வேலை கொடுக்கப்படுகிறது. எனவே நூறு நாட்கள் வேலை வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 255 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: