கீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது

Hits: 0

கீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது.

கீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், நாணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கேசன் மகன் அஜித்குமார்(வயது 25), சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் முத்துராணி(20). இவர் திருவையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என்று முருகானந்தம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்களை கண்டுபிடித்து அழைத்துவந்து நேற்று முன்தினம் காதலர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடையே போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முத்துராணி தான் அஜித்குமார் உடன் தான் வாழ்வேன் என உறுதி அளித்தார். இதில் பெண் ‘மேஜர்‘ என்பதால் போலீசார் காதலர்கள் இடமும், அவர்களின் குடும்பத்தாரிடமும் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அஜித்குமார், தனது மனைவி முத்துராணி மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் இத்திருமணத்தை விரும்பாத பெண்ணின் தந்தை முருகானந்தம்(42), பெண்ணின் சகோதரர்கள் விக்னேஸ்வரன், முரளிகிருஷ்ணன்(23), முருகராஜ்(20) ஆகியோர் ஆத்திரம் அடைந்து அவர்களை தாக்க திட்டமிட்டு பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களை அழைத்து சென்றனர். இந்நிலையில் அஜித்குமார் அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவியுடன் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கீழப்பழுவூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது, அவர்களை வழிமறித்த பெண் வீட்டார், காரின் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அஜித்குமார், முத்துராணி, ரெங்கேசன்(42) அவரின் மனைவி முனியம்மாள்(40), நீலகண்டன்(48), பழனிசாமி(48), சிவகுமார்(38), கிட்டு(48), கார் டிரைவர் ஜெகதீசன்(24) ஆகிய 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன், முரளிகிருஷ்ணன், முருகராஜ், இவர்களின் நண்பர்கள் அய்யனார்(23), மோகன்ராஜ்(23), மணிகண்டன்(31), சிவபாலன்(23), பாக்கியராஜ்(29), விமல்ராஜ்(23) ஆகியோரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தப்பி ஓடிய பெண்ணின் தந்தை முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்திLeave a Reply